தமிழகத்தின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் - தமிழக அரசு
தமிழக தொழில் வளர்ச்சிக்கு 2-வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக உயர்த்திட இலக்கு நிர்ணயித்து அதை நோக்கியச் செயல்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. 2030-ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் வளர்ச்சிக்கு உறுதுணையாக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வரிசையில் மாநிலத் தலைநகரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது. ஏறக்குறைய 24 ஆண்டுகளாக இரண்டாவது உருவாக்கத்துக்கான முயற்சிகள் குறித்து பேசப்பட்டபோதிலும், தற்போதுதான் விமான நிலையம் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமான இடங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டதுதான் பரந்தூர். ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டிற்குள் கட்டி முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த விமான நிலையம் எதிர்கால மக்கள் தொகைப் பெருக்கம், தொழில் துறை வளர்ச்சி ஆகியவற்றை 30 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகள் வரை சமாளிக்கப் போதுமானதாக இருக்கும். இத்திட்டத்துக்கு ரூ.100 செலவு செய்வதன் மூலம் மாநிலத்துக்கு வருமானமாக ரூ. 325 கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
அனைத்துக்கும் மேலாக சரக்குகள் கையாள்வது அதிகரிக்கும்போது தொழில்துறையினருக்கு அதிகபட்ச வாய்ப்புகள் உருவாகும்; வேலை வாய்ப்புகள் பெருகும். தமிழக தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் 2-வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.