பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கறுப்பின எம்.பிக்கு எதிராக இனவெறி பேச்சு
புலம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான கறுப்பின மக்களை ஏற்றிச்சென்ற ஒரு கப்பல், பிரான்ஸ் அருகே மத்தியதரைக் கடலில் உள்ளது. புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் பிரான்ஸ் அரசாங்கம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அரச சார்பற்ற நிறுவனங்கள்(என்ஜிஓ) மற்றும் தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பிரான்ஸ் நாடாளுமன்ற கூட்டத்தில் புலம்பெயர்ந்தோர் விவகாரம் பற்றி இடதுசாரியை சேர்ந்த கறுப்பின எம்.பி கார்லோஸ் மார்டென்ஸ் பிலோங்கோ பேசினார்.
அப்போது ஆத்திரமடைந்த வலதுசாரியை சேர்ந்த குடியேற்ற எதிர்ப்பு தேசிய பேரணி கட்சியின் எம்.பி. கிரிகோயர் டி போர்னாஸ் (வெள்ளையினத்தவர்), எம்.பி. பிலோங்கோ பேசிக்கொண்டிருக்கும் போது, "நீங்கள் ஆப்பிரிக்காவுக்கு திருப்பிச் செல்லுங்கள்" என்று கத்தினார்.இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சபாநாயகர் யேல் பிரவுன்-பிவெட் நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்திவைத்தார். இன்றைய அமர்வில் இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து பிரான்சில் கறுப்பின எம்.பி மீது இனவெறியை ஆதரித்து பேசியதாக எம்.பி. கிரிகோயர் மீது விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், அவர் தான் எம்.பி. பிலோங்கோவை பார்த்து அப்படி கூறவில்லை. கப்பலில் காத்துக்கிடக்கும் புலம்பெயர்ந்த கறுப்பின மக்களை பார்த்து அந்த வார்த்தைகளை கூறியதாக அவர் தெரிவித்தார். பிரான்ஸ் அரசு எம்.பி. கிரிகோயர் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பிரான்சின் ஜனநாயகத்தில் இனவாதத்திற்கு இடமில்லை என்று பிரதமர் எலிசபெத் போர்ன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.