பிரேஸிலுடனான விமான போக்குவரத்தை இரத்து செய்வதாக பிரான்ஸ் அறிவிப்பு
தென் அமெரிக்க நாடான பிரேஸிலில், புதிய மாறுபாடுள்ள கொரோனா வைரஸ் பெருகிவரும் அச்சங்களுக்கு மத்தியில் பிரான்ஸ் பிரேஸிலில் இருந்து வரும் அனைத்து விமானங்களையும் இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘நிலைமை மோசமடைந்து வருவதை நாங்கள் கவனிக்கிறோம். எனவே பிரேஸிலுக்கும் பிரான்சுக்கும் இடையிலான அனைத்து விமானங்களையும் மேலதிக அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்’ என கூறினார்,
இதனிடையே பிரேஸில் மற்றும் தென்னாரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று, பிரான்ஸில் 6 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகளிடம் கண்டறியப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் ஆலிவர் வேரான் தெரிவித்துள்ளார்.