செல்பி எடுக்க முயன்று கூவத்தில் விழுந்த இளைஞர்
சென்னை கொடுங்கையூர் டி.எச்.சாலை சந்திரா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மூர்த்தி. பொறியாளரான இவர், பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். வழக்கமாக தினமும் மெரினா கடற்கரையில் மூர்த்தி நடைபயிற்சி செய்வது வழக்கம் அதன்படி இன்று காலை மெரினா கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு வந்தார்.
பயிற்சி முடிந்த உடன் அண்ணாசதுக்கம் அருகே உள்ள நேப்பியர் பாலத்தில் இருந்து தனது செல்போனில் இயற்கை அழகை ரசித்தப்படி செல்பி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காற்று பலமாக வீசியது. இதில் நிலைத்தடுமாறிய மூர்த்தி நேப்பியர் பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் விழுந்து சகதியில் சிக்கி உயிருக்கு போராடினார்.
இதை பார்த்த பொதுமக்கள் சம்பவம் குறித்து அண்ணாசதுக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மிதவை மூலம் கயிறு கட்டி மூர்த்தியை பத்திராமாக உயிருடன் மீட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் நேப்பியார் பாலம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.