அரசாங்க சேவையை டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேசிய கொள்கை
டிஜிட்டல் அடையாள அட்டைகளை வெளியிடுதல் உள்ளிட்ட அரசாங்க சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு அவசியமான தேசிய கொள்கையைத் தயாரிப்பதற்கான பணிப்புரையை தேசிய பேரவையின் ஊடாக முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ நேற்று (18) தெரிவித்தார்.
பாராளுமன்றத்தல் இன்று நடைபெற்ற உப குழுவின் முதலாவது கூட்டத்தில் அரச நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு, தகவல் தொழில்நுட்ப அமைச்சு, ஆட்களைப் பதிவுசெய்வது தொடர்பான திணைக்களம், இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை விரைவுபடுத்துவதற்கு அவசியமான தகவல்களைச் சேகரித்தல், தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தகவல்களைப் பாதுகாக்கும் ஏஜன்சி விரைவில் அமைப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
அரசாங்க சேவையை டிஜிட்டல் மயப்படுத்தி நவீனமயப்படுத்துவதற்குத் தற்போதுள்ள சட்டத் தடைகளை நீக்குவதற்கான கட்டளைச் சட்டங்களைத் திருத்த வேண்டியதன் அவசியத்தையும் உபகுழு விரிவாகக் கலந்துரையாடியது. இது தொடர்பான அறிக்கையொன்றை இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னவுக்கு உபகுழு பரிந்துரைத்தது.
தேசிய சபையின் ஊடாக பாராளுமன்றத்தில் திருத்தங்களை சமர்ப்பித்ததன் பின்னர் தேசிய கொள்கையொன்றை விரைவாக தயாரிக்க முடியும் என உபகுழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய கொள்கையொன்றில் இருந்து அரச சேவையை டிஜிட்டல் மயமாக்குவதை துரிதப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு தேவையான சேவைகளை விரைவாகவும் அதிக வினைத்திறனுடனும் வழங்க முடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.