தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. நாட்டில் கொரோனாவின் முதல் அலையைவிட 2-வது அலை மிகவும் வீரியமாக தாக்கி வருவது மத்திய, மாநில அரசுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இந்த தொற்றை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதேபோல, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இந்த ஆலோசனைக்குப் பிறகு ஒரு சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.