இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம்
உலகில் எந்தவொரு நாட்டு மாணவர்களும் கல்வி கற்கக் கூடிய வகையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை ஒன்றை முன்மொழிந்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவிற்கும் (Masatsugu Asakawa) இடையிலான சந்திப்பு இன்று (30) முற்பகல் மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை கவனத்திற்கு கொண்டு வந்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் வரவேற்றார்.
கடந்த காலங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு வழங்கிய அவசர உதவிகளுக்காக இதன்போது நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.
இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தயாராக இருப்பதாக அதன் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் உறுதியளித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகள் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருக்கு, ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.