அரசாங்கம் அபிவிருத்தி திட்டத்தில் பாகுபாடு காட்டவில்லை - திலீபன்
அரசாங்கம் அபிவிருத்தி திட்டத்தில் பாகுபாடு காட்டவில்லை. இந்த அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கூட அரசாங்கத்தால் பயன் அடைவதை மறந்து விடுகிறார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்தார்.
வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் சமுர்த்தி திணைக்களத்தின் புத்தாண்டு சந்தையை இன்று (10) திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டில் தினம் தினம் மக்களுக்கு பயன்படக் கூடிய பாரியளவிலான அபிவிருத்திகள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் வடக்கில் உள்ள சிலர் எமது ஆளுமை மிக்க அரசாங்கத்தை வெறும் விமர்சனத்தால் மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த விமர்சிப்பவர்கள் கூட இந்த அரசாங்கத்தால் பயன் அடைவதை மறந்து விடுகிறார்கள். இந்த அரசாங்கம் அம்பாந்தோட்டைக்கு ஒரு அபிவிருத்தி திட்டத்தையும் வவுனியாவில் கிள்ளித் தெளிப்பதைப் போன்றும் செய்யவில்லை. அம்பாந்தோட்டைக்கு என்ன அபிவிருத்தியோ அதே அபிவிருத்தியே வவுனியா மாவட்டத்திலும் சம நேரத்தில் நடைபெறும். ஆகவே இந்த அரசாங்கத்தில் பாகுபாடு இல்லை. ஆனால் விமர்சிப்பவர்கள் விமர்சித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.
கடந்த 8 நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டேன். அங்கு ஜனாதிபதி அவர்கள் தனது ஆட்சியில் இருக்கக் கூடிய ஒரு அமைச்சரையே எங்களுக்கு முன் விமர்சித்தார். நான் கிராமங்கள் தோறும் மக்கள் குறைகேள் கூட்டங்களை நடத்தி வருகின்றேன். அப்போது ஒரு மாவட்டத்தின் கிராமத்திற்கு சென்ற போது அங்கு உள்ள எல்லா பாடசாலைகளும் புனரமைப்பு செய்யப்டபட்டுள்ளன. பாடசாலைகளா, கோவில்களா என்ற வகையில் துப்பரவுப் பணி செய்யப்பட்டிருந்தது. ஆனால் வேறு மாவட்டங்களில் பாடசாலைகள் பல மாட்டுக் கொட்டில்கள் போன்று காட்சியளிக்கின்றது. இதற்கு காரணம் என்ன?
குறித்த அமைச்சரின் மாவட்டம் என்ற காரணத்தினால் பாடசாலை புனரமைக்கப்பட்டுள்ளதா. அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா. அல்லது அடுத்து வரும் தேர்தலுக்காக இவ்வாறு நடந்ததா என்று ஒரு கருத்தை கண்டிப்போடு தெரிவித்திருந்தார். அந்தவகையில் ஜனாதிபதியை நினைத்து நான் சந்தோசமடைகின்றேன். மணல் அகழ்வு, இரத்தினக்கல் கல் அகழ்வு என்பன பெக்கோ இயந்திரத்தின் மூலம் அகழ்வு செய்யப்படுவதை தடை செய்யுமாறு ஜனாதிபதி பொலிசாருக்கு தெரிவித்தார். அங்கு அகழ்வுக்காக தினக்கூலியாக வேலை செய்பவர்களை பொலிசார் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். அப்போது ஜனாதிபதி கூறினார் நான் சொல்லும் கருத்து பிழையாக மக்களிடம் சென்றடைகிறது. ஆகவே அவ் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்து தனது பகுதியான கொழும்புக்கு கொண்டு வருமாறு கோரினார். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதனை தீர்த்து தருவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். எனவே உங்களுக்கு உள்ள பிரச்சனைகளை எழுத்து மூலமாக என்னிடமோ அல்லது பிரதேச செயலகங்களுக்கோ கையளியுங்கள். குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை தீர்த்து தருகின்றேன் என்றார்.