கொரோனா இரண்டாம் அலை - ஆளுநர் பன்வாரிலால் அறிவுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று அறிவித்தது. கொரோனா முதல் அலையின் போது பின்பற்றப்பட்ட முழு ஊரடங்காக இல்லாமல் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஷோ ரூம்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
கோவில்கள், தியேட்டர்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுவிட்டது. இந்நிலையில், கொரோனா தடுப்பு விதிகளை தமிழக மக்கள் முறையாக பின்பற்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுறுத்தியுள்ளார்.
பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதுடன் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும். கொரோனா நோய் இரண்டாம் அலை காரணமாக முதியவர்களை குடும்பத்தினர் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். தகுதி உடையவர்கள் தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா நோயைக் கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை பின்பற்றி மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.