ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சிக்கு ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது தொடரும் அடக்குமுறை குறித்து ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சிக்கு பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவசரகாலநிலை மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி அண்மையில் அறிவித்ததைக் சுட்டிக்காட்டிய ஜி.எல்.பீரிஸ், பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பினார். இவ்வாறான அடக்குமுறையானது ஜெனீவாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 வது அமர்வில் நாட்டை மிகவும் கடினமான சூழ்நிலைக்கு தள்ளக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் நடந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையையும் பாதிக்கக்கூடும் என்றும் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.
இதேவேளை சர்வதேச சமூகம் தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், அனைவரையும் ஏமாற்ற முடியாது என்றும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் தவறியமை ஆளும் கட்சியின் நெருக்கடியை எடுத்துக்காட்டுவதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.