அம்பாறை கரையோரத்தை ஆட்கொள்ளும் கடல்
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் அண்மைய நாட்களாக ஏற்பட்டுள்ள தீவிர கடலரிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையை முன்னிறுத்தி அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசால் காசிம் ஆகியோர் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட ஒலுவில், பாலமுனை, நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை பிரதேச மக்கள் குறித்த கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட விதங்கள் தொடர்பில் விளக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன் மூலம் மக்களின் சொத்துக்கள் கடலலையில் காவு கொள்ளப்பட்டுள்ளதையும், இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ள விடயங்களையும் ஜனாதிபதி செயலாளருக்கு எடுத்துரைத்தனர்.
மேலும் இந்த அனர்த்தத்தின் அவசர நிலை கருதி அவசரமாக முன்னெடுக்கவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு ஆழமாக கலந்துரையாடப்பட்டது.ஜனாதிபதி செயலாளருடன், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசால் காசிம் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இது தொடர்பில் எடுத்துரைத்து அவசர நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய அவசியம் தொடர்பில் வலியுறுத்தவுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது