வேலை செய்ய முடியாதவர்கள் இருந்தால் உடனே வெளியேறவும் - ரணில்
கட்சி, நிற, இன, மத பேதமின்றி நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைக்கும் கடந்த காலப் பாடத்தை ஐக்கிய தேசியக் கட்சி கற்றுத் தந்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தனது நோக்கமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு தாம் யாரையும் கோரவில்லை எனவும், நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு காலதாமதம் செய்யாமல் அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரம் கோல்டன் மெங்கோ மண்டபத்தில் இன்று (21) நடைபெற்ற அனுராதபுரம் மாவட்ட அபிவிருத்தி சபையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்கும், எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம். நாம் இணைந்து பணியாற்றும்போது, புதிய அரசியல் கோட்பாடு நமக்குக் கிடைக்கும். பழைய பாதையில் செல்ல முடியாது. ஒரு புதிய முறைக்கு செல்லலாம். நாம் ஒரு வினயமான அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இன்று தேர்தலுக்குச் சென்று ஆட்சியைப் பெற்றுவிடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம். இதுதான் உண்மை. உண்மையைப் பேசுவோம். எனவே, அனைவரும் இந்தப் பொறுப்பை ஏற்றுச் செயல்படுவோம் என்றும் கூறினார்.