பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தி.மு.க.வுக்கு அருகதையில்லை- அண்ணாமலை
புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமானம் மூலம் திருச்சி வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் பேசிய அண்ணாமலை , முதல் அமைச்சர் டெல்லிக்கு புறப்படும் முன்பாக பிரதமரிடம் குனிந்து கும்பிட செல்லவில்லை என்று வீர வசனம் பேசிவிட்டு சென்றார். ஆனால் பிரதமரை அவர் சந்தித்தபோது, இருக்கையின் நுனியில் பவ்யமாக அமர்ந்து பேசியது உலகத்துக்கே தெரியும். எனவே தி.மு.க. எப்போதுமே முன்னுக்குப்பின் முரணாக பேசி அரசியல் நடத்தும் கட்சியாகவே இருக்கிறது. கூத்து பட்டறையாக மாறிவிட்ட தி.மு.க.வில் யாரும், எதையும் பேசலாம் என்ற நிலை உள்ளது.
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் சமரசம் செய்து கொள்வதற்கு மற்றும் கூட்டணி வைப்பதற்கு குடும்ப ஆட்சி என்பது இருக்கக்கூடாது. ஊழலற்ற அரசு மற்றும் மக்களுக்கு நல்லாட்சி புரிய வேண்டும். இவை மூன்றுமே இல்லாததால் அதற்கு அருகதை இல்லை என்பதை முதல்-அமைச்சர் நன்கு உணர்ந்திருக்கிறார். பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைப்பதற்கு எக்காலத்திலும், எந்த ஒரு தகுதியும் கிடையாது.
தமிழக நிதி அமைச்சர் பேசுவதற்கு ஆதாரம் மற்றும் அர்த்தம் இருக்க வேண்டும். இலவசங்களால் நாடு சீரழிந்துள்ளது, பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதில் பல கோடி ரூபாய் ஊழலும் நடந்துள்ளது. எனவே தி.மு.க.வில் உள்ள பொருளாதார நிபுணர்கள் இலவசங்களால் தமிழகம் முன்னேறி இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும். இலவசம் கொடுப்பதனால் தமிழகத்தில் வளர்ந்தவர்கள் கோபாலபுரம் குடும்பத்தினர் மட்டுமே. கமிஷனால் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே லாபம்.
தமிழகத்திலும் குட்டி இலங்கை போல ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் அரசை தாண்டி, தமிழக மக்கள் பொருளாதார அடிப்படையில் வளர்ச்சி பெற்றுக்கொண்டிருப்பதால் இது தெரியவில்லை. ராகுல்காந்தி ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு வேஷம் போடுகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை அதில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்கிறார்கள் என்றும் கூறினார்.