மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வது எமது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்
உலகளாவிய தொற்று நோயின் விளைவாக கடந்த ஆண்டு மருத்துவ நிபுணர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. மிகவும் சவாலான சூழ்நிலைகளிலும் கூட இலங்கை முன்னணியில் இருப்பதற்கு காரணம் எமது சுகாதார பணியாளர்களின் சக்தி, தொழிற்திறன் மற்றும் எமது பொது சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளினால் ஆகும்.
ஆனாலும் எமது சுகாதார கட்டமைப்பில் இன்னும் வெற்றிகொள்ள வேண்டிய பல பலவீனங்கள் காணப்படுவதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டி வைத்தியர் சங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான அமர்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, கண்டி வைத்தியர் சங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான அமர்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இச்சங்கமும் அதன் அங்கத்தவர்களும் பல தசாப்தங்களாக சமூகத்தில் பயனுள்ள செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை யாவரும் அறிந்தது. உங்களின் தொடர்ச்சியான கல்விசார், பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் உங்கள் அனைவரினதும் முயற்சிகள் இப்பிரதேச மக்களுக்கு பெரிதும் பயனளித்துள்ளன என நான் நம்புகின்றேன் என்றார்.
இறுதியாக எதிர்வரும் காலங்களில் நடக்கக்கூடிய அமர்வுகள் உங்கள் அனைவருக்கும் சிறந்த பயனுள்ள அமர்வுகளாக அமைவதற்கும் உங்களின் அனைத்து நடவடிக்கைகளும் வெற்றிபெற வேண்டுமென்றும் பிரார்த்திக்கின்றேன் என்றும் கூறினார்.