தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும் மாலையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழகத்திலுள்ள அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள், மூத்த குடிமக்கள் என அனைவரும் உற்சாகமாக வாக்களித்தனர். கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின் தேனாம்பேட்டையிலும், துணை முதல்வர் ஓபிஎஸ் பெரியகுளத்திலும் தங்களது வாக்கினை செலுத்தினர்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்கு மேல் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. வாக்குப்பதிவு நேரம் முடிந்தாலும், வாக்குச்சாவடியில் வந்து காத்திருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் தமிழகம் முழுவதும் மாலை 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்த வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளன. பதிவான வாக்குகள் மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.