9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சைக்கோ கணவன்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகர காவல் ஆணையருக்கு இரு பெண்கள் தங்கள் கணவர் மீது புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் கன்சர்லபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதில் தங்களது கணவர் அருண் குமார் என்பவர் ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறினர்.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அருண் 9 திருமணங்கள் செய்து கொண்டுள்ளதாகவும், ஆனால் அவரது செல்போன் அழைப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அவர் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளதும், அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு தள்ளியதும் தெரிய வந்துள்ளது.
இதுமட்டுமின்றி, திரைப்படங்கள் மீது அதிக நாட்டம் கொண்ட அருண் குமார், திரைப்பட வசனங்கள் பேசியே, பெண்களை தமது வலையில் வீழ்த்தியுள்ளார். ரகசியமாக திருமணம் செய்து கொள்ளும் அவர்களை குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியுள்ளார்.
மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்து அடித்து துன்புறுத்தியுள்ளார். அருண் குமாரிடம் சிக்கிய இரு பெண்கள் மகளிர் ஆணையத்தின் உதவியுடன் போலீசாரை நாடிய பின்னரே, இந்த விவகாரம் தெரிய வந்தது.
புகாரளித்துள்ள இரு பெண்களும், அருண் குமாரின் முதல் இரு மனைவிகள் என்று தெரியவந்துள்ளது. மேலும், அருண் குமாரால் பாதிக்கப்பட்ட பெண்கள், நேரடியாக போலீசாரை அணுகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த வழக்கில் டி.ஜி.பி. கெளதம் சவாங் நேரடியாக சிறப்பு கவனம் செலுத்தி விசாகப்பட்டினம் துணை காவல் ஆணையர் ஐஸ்வர்யா ரஸ்தோகி தலைமையில் விசாரணையை தொடங்கிய போலீசார், அருண் குமாருக்கு பாலியல் தொழில் மற்றும் கஞ்சா கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
மேலும், அருண் குமார் அவரது நண்பரையே கொலை செய்துள்ளதாக விசாகப்பட்டினம் காவல் ஆணையர் மனிஷ்குமார் சின்ஹாவிற்கு வாட்ஸ் ஆஃப் மூலம் பெண் புகார் அளித்தார். கொல்லப்பட்ட அந்த நபர் அருண் குமாரின் நண்பர் என்றே கூறப்படுகிறது.
மேலும், அருண் குமாரின் குடியிருப்பில் இருந்து பல ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அருண் குமாருக்கு இந்த தொழிலில் உதவி செய்தவர்களையும் போலீசார் விசாரணையை செய்து வந்த நிலையில் கன்சர்லபாளையம் போலீசார் அருண் குமாரை கைது செய்து இந்த வழக்கின் பின்னனியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்களை ஏமாற்றி காதல் வலையில் விழ வைத்து அவர்களை பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி பணம் சம்பாதிக்கும் கொடூரனின் சம்பவத்தில் ஆந்திர முக்கிய புள்ளிகளும் இடம்பெறலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.