
சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திற்கு அழைப்பு
திருட்டையும் ஊழலையும் இலஞ்சத்தையும் உடனே நிறுத்தி, சுகாதாரத்துறையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பேரழிவு ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் தங்கள் மகத்தான அர்ப்பணிப்பைச் செய்வது சுகாதார ஊழியர்கள் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவர்கள் சுதந்திரமாக தமது கடமைகளை மேற்கொள்வதற்குத் தேவையான சூழலை உருவாக்குவது அரசின் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (25) பிற்பகல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) அதிகாரிகளைச் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
தூரநோக்கற்ற ஆட்சியினால் நாட்டின் தாய்மார்களும் குழந்தைகள் தலைமுறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டில் கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும், திரிபோஷ தொழிற்சாலை ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாகவும், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தளவு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.