21/4 தாக்குதல் குறித்து இன்னும் ஒருவருக்கேனும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை
21/4 தாக்குதல் சம்பவம் இடம்பெற்று ஈராண்டுகள் நெருங்கினாலும்கூட தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவருக்கேனும் நீதிமன்றில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சட்டத்தரணி அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் , 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் அமெரிக்காவில்கூட வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவருக்கேனும் இலங்கை நீதிமன்றத்தில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அத்துடன், தாக்குதல் சம்பவத்தின் பின்னணி மற்றும் பிரதான சூத்திரதாரிகளும் கண்டறியப்படவில்லை. அதனை நோக்கி விசாரணைகள் நடைபெறுவதாகவும் தெரியவில்லை. கட்டாயம் தாக்குதலின் பின்புலம், பிரதான சூத்திரதாரிகள் கண்டறியப்படவேண்டும். அப்போதுதான் நீதி கிடைக்கும்.
21/4 தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியவர்கள் மற்றும் பொறுப்புக்கூறவேண்டியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படவேண்டும் என சட்டத்தரணி அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.