












இலங்கைக்கு 123 கோடி ரூபா பெறுமதியான அரிசி, மருந்து வகைகள்
இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில், அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
கடல் சூழ்ந்த இலங்கை நாடு, இன்று கண்ணீரால் சூழப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் மக்களுக்காக தி.மு.க. அரசு ஆளுங்கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்த போதும் ஆற்றிய பணிகளை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’ என்பதைப் போல, நம்முடைய ரத்தத்தில், உணர்வில், வாழ்வில் கலந்த ஒரு பிரச்சினையாக இலங்கைப் பிரச்சினை இருந்து வருகிறது. இலங்கையில் வாழக்கூடிய ஈழத்தமிழர் நலன் கருதி அரசியல் ரீதியாகப் பல்வேறு முழக்கங்களை வெவ்வேறு காலக்கட்டங்களில் நாம் முன்வைத்திருக்கிறோம்.
ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்காக நாம் உதவிகள் செய்தாக வேண்டும். அந்த வகையில் பின்வரும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கலாம் எனத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.
40 ஆயிரம் டன் அரிசி; இதனுடைய ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய். அதேபோல், உயிர் காக்கக்கூடிய 137 மருந்துப் பொருட்கள்; இதன் மதிப்பு 28 கோடி ரூபாய். குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால்பவுடர். இதன் மதிப்பு 15 கோடி ரூபாய். இவற்றையெல்லாம் இலங்கையில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் நாம் வழங்க நினைக்கிறோம். இவற்றை மாநில அரசு நேரடியாக வழங்க முடியாது. ஒன்றிய அரசின் அனுமதி யோடு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாகத்தான் வழங்க வேண்டும். இலங்கையில் இத்தகைய நெருக்கடி ஏற்பட்டதுமே, இந்திய அரசிடம் இதுகுறித்த கோரிக்கையை நான் முன்வைத்தேன்.
31-3-2022 அன்று டெல்லி சென்று பிரதமரை சந்தித்தபோதும் இதனை நான் வலியுறுத்தியிருக்கிறேன். அதனைத் தொடர்ந்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். அவருக்கும் 15-4-2022 அன்று கடிதம் எழுதி நினைவூட்டியிருக்கிறேன். இன்றுவரை எந்தத் தகவலும் இல்லை. ஆனால் அங்கு நிலைமை தற்போது மிகவும் மோசமடைந்துள்ளது.
இந்த எண்ணத்தை ஒன்றிய அரசுக்குச் சொல்லக்கூடிய வகையில் ஒரு தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் நிறைவேற்றி அனுப்புவது காலத்தினுடைய கட்டளை என்று அரசு கருதுகிறது. அதன் அடிப்படையில், கீழ்க்காணும் தீர்மானத்தை நான் இங்கே முன்மொழியக் கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.