
றம்புக்கணை சம்பவம் – தெல்தெனிய நீதிமன்றத்தின் உத்தரவு
அண்மையில் றம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பொலிஸ் அதிகாரிகள் எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (29) தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
றம்புக்கனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மற்றும் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகல பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் கடந்த 27ஆம் திகதி உத்தரவிட்டது.
இது தொடர்பான உத்தரவு நேற்று (28) பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்றதுடன், பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யுமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.
சந்தேகநபர்கள் நால்வரும் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமிந்த லக்ஷன் கடந்த 19ஆம் திகதி றம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.