
இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி வரும் 31-ம் தேதி இந்தியா வருகை
உக்ரைன் மீது ரஷியா 33-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரால் உலக அரசியலில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. இந்த போர் மேற்கத்திய நாடுகளுக்கும், ஆசிய நாடுகளுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது.
குறிப்பாக, உக்ரைன் - ரஷியா இடையேயான போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இந்தியா மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியாவின் நிலைப்பாடு ரஷியாவுக்கு எதிராக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்தன.
ஆனால், இந்த விவகாரத்தில் இந்தியா எந்த நாட்டிற்கு ஆதரவாகவும் இல்லாமல் நடுநிலை என்ற கொள்கையிலேயே உள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மேற்கத்திய நாடுகளில் முக்கியத்தலைவர்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். ஆஸ்திரியா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கடந்த சில நாட்களில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில், இங்கிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி எலிசபெத் டிரூஸ் வரும் வியாழக்கிழமை (31-ம் தேதி) இந்தியா வர உள்ளார். அவர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்திக்க உள்ளார். இந்த வருகையின் போது உக்ரைன் விவகாரம், இரு நாட்டுக்கு இடையேயான வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.