தலைமை ஆசிரியரை மிரட்டிய பள்ளி மாணவன்- நாற்காலிகளை உடைத்து அடாவடி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மஞ்சினி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவன் ஒருவன் தலைமுடியை டிஸ்கோ கட்டிங் மாடலில் வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வந்துள்ளார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு பள்ளி தலைமையாசிரியர் கண்ணன் என்பவர் சம்பந்தப்பட்ட மாணவனை அழைத்து பள்ளிக்கு இதுபோல் வரக்கூடாது என்றும் , தலைமுடியை ஒழுங்காக வெட்டிக் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார் .
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் தலைமையாசிரியர் அலுவலகத்தில் இருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை கீழே தள்ளி உடைத்துள்ளான். மாணவனை வெளியே தள்ளி அனுப்பிவிட்டு தலைமையாசிரியர் தனது அறை கதவை சாத்திய பிறகு அறைக் கதவையும் மாணவன் கண்ணாடி பாட்டில் மற்றும் மர கட்டையை கொண்டு அடித்து உடைத்துள்ளார் . இந்த சத்தத்தை கேட்டு அங்கிருந்த ஆசிரியர்கள் ஓடி வந்து மாணவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பின்னர் மாணவனின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வர கூறியுள்ளார்கள். மாணவன் தனது பெற்றோரை அழைத்து வராமல் நேற்று தனது தாத்தாவை அழைத்து வந்துள்ளான். அப்போது பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மாணவனின் செயல் குறித்து அவரது தாத்தாவிடமும் தெரிவித்தபோது மாணவன் தன்னை ஒரு ரவுடி போல் பாவித்து பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும் அங்கிருந்த போலீசாரிடமும் தான் தோன்றித்தனமாக பேசியுள்ளார். அதைத்தொடர்ந்து போலீசார் மாணவனுக்கு தக்க அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.