பெங்களூர் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து 8 பேர் பலி
கர்நாடக மாநிலம் பவகடா தாலுகா பாலவல்லி காட் அருகே இன்று காலை தனியார் பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. பஸ்சில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
ஒரு திருப்பத்தில் பஸ் சென்றபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மற்றொரு பஸ் மீது மோதியது. இதனால் தனியார் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த கல்யாண் (வயது18), அமல்யா(17), அஜித்(21), ஷாநவாஸ்(19) உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் எஸ்.பி.ராகுல்குமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியானவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டன. காயம் அடைந்தவர்கள் பாவகடா தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் மேல் சிகிச்சைக்காக தும்கூர் மாவட்ட மருத்துவ மனைக்கும், பெங்களூரு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து நடந்த உடனே டிரைவர் தப்பி ஓடிவிட்டார். சம்பவ இடத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடினர். மேலும் விபத்து காரணமாக சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக அந்த வழியே போக்குவரத்து பாதித்தது.