
ரஷியாவிற்கு எதிராக களமிறங்கியுள்ள லட்சக்கணக்கான ஹேக்கர்கள்
உக்ரைன் மீது ரஷியா இன்று 20-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. ஆனால், சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒருபுறம் போர்க்களத்தில் இரு நாட்டு வீரர்களும் சண்டையிட்டு வந்தாலும் மறுபுறம் இரு நாடுகளுக்கும் இடையே சைபர் தாக்குதலும் நடந்து வருகிறது.
குறிப்பாக ரஷியா, உக்ரைன் மீது போர் தொடங்கிய முதல் மூன்று நாட்களிலேயே உக்ரேனிய இராணுவம் மற்றும் அரசாங்கத் துறைகளுக்கு எதிரான சைபர் தாக்குதல்கள் 196 சதவீதம் அதிகரித்துள்ளதாக செக் பாயிண்ட் ரிசர்ச் என்ற உலகளாவிய சைபர் தாக்குதல்களைக் கண்காணிக்கும் அமைப்பு தெரிவித்து இருந்தது.
இதை தொடர்ந்து கடந்த மாதம் உக்ரைன் நாட்டின் டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் மந்திரி மைக்கைலோ பெடோரோ இது தொடர்பாக டுவிட்டரில் ஒரு வேண்டுகோள் விடுத்தது இருந்தார். அதில் " நாங்கள் ஒரு தகவல் தொழில்நுட்ப குழுவை அமைக்க இருக்கிறோம். எங்களுக்கு டிஜிட்டல் உலகில் திறமை வாய்ந்தவர்கள் தேவை. அனைவருக்கும் தனிப்பட்ட பணிகள் வழங்கப்படும் " என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த சைபர் தாக்குதலில் உக்ரைன் வெற்றிபெற உலகம் முழுவதும் இருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ ஹேக்கர்கள் உதவி வருகின்றனர். "ஐடி ஆர்மி ஆப் உக்ரைன்" என்ற டெலிகிராம் குழு மூலம் இந்த தன்னார்வலர்கள் செயல்படுகின்றனர். குறிப்பாக இவர்களுக்கு ரஷ்ய இணையதளங்களை குறிவைக்கும் வகையில் பணிகள் வடிவமைக்கப்படுகிறது.