
சர்வதேச மனிதாபிமான உதவி கண்காட்சி துபாயில் தொடங்கியது
துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில் சர்வதேச மனிதாபிமான உதவி மற்றும் மேம்பாடு தொடர்பான கண்காட்சி, கருத்தரங்கு தொடங்கியது.
இதில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், நைஜீரியா உள்ளிட்ட 80 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மனிதாபிமான உதவி அமைப்புகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன.
18-வது ஆண்டாக நடைபெறும் இந்த கண்காட்சியில் 600-க்கும் மேற்பட்ட சர்வதேச அளவிலான தன்னார்வ தொண்டு அமைப்புகள் கலந்து கொண்டு இருக்கின்றன. இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் 17 நிலையான வளர்ச்சி இலக்குகள் என்ற கருப்பொருளில் கருத்தரங்கு நடக்கிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் உரை நிகழ்த்துகின்றனர்.
இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை துபாய் அரசின் தகவல் தொடர்புத்துறை பொது இயக்குனர் ஷேக் ஹசர் பின் மக்தூம் அல் மக்தூம் தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய நாடுகள் சபை, செஞ்சிலுவை சங்கம், செம்பிறை சங்கம், துபாய் சர்வதேச மனிதாபிமான நகரம், துபாய் இஸ்லாமிய விவகாரம் மற்றும் தொண்டு துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் அரங்குகளை பார்வையிட்டார். அந்த நிறுவனங்கள் எத்தகைய மனிதாபிமான பணிகளை மேற்கொள்கின்றன, மேலும் அந்த பணிகளுக்கு எந்த வகையான உதவிகளை வழங்கி வருகின்றன என்பது குறித்து அதன் அதிகாரிகள் விவரித்தனர்.