
யுக்ரேனில் சண்டையிட சீனாவிடம் ஆயுதங்களைக் கோரும் ரஷ்யா
யுக்ரேன் போரில் பயன்படுத்தும் வகையில் ராணுவத் தளவாடங்களை சீனா வவங்க வேண்டும் என ரஷ்யா விரும்புவதாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யா சீன உபகரணங்களை கோரி வருவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ரஷ்யா எந்த வகையான ராணுவத் தளவாடங்களை சீனாவிடம் கோருகிறது என்பதைக் குறிப்பிட அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்று, அந்த நாட்டுக்கு உதவி செய்வதற்கு சீனா தயாராகி வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அந்தச் செய்தி மேலும் கூறியுள்ளது.
இதேபோல நியூயார்க் டைம்ஸிலும் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதிலும் அமெரிக்க அதிகாரிகள் மேற்கோள்காட்டப்பட்டிருக்கிறார்கள். பொருளாதாரத் தடைகளின் தீவிரத்தைத் தணிக்கும் வகையில் பொருளாதார ரீதியிலான உதவிகளை சீனாவிடம் ரஷ்யா கோரியிருப்பதாக அந்தச் செய்தி கூறுகிறது.
ரஷ்யா - யுக்ரேன் மோதலில் சீனா இதுவரை தன்னை நடுநிலை வகிப்பதாக காட்டுவதற்கே முற்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை மற்றும் பொது அவையில் நடுநிலை வகித்தது. ரஷ்யாவின் படையெடுப்பை இதுவரை வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை.
இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் ரோமில் சீன வெளியுறவுக் கொள்கை அதிகாரி யாங் ஜீச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை என்பிசி தொலைக்காட்சியில் பேசிய சல்லிவன், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளால் ஏற்படும் சிக்கல்களை "சீனா அல்லது வேறு யாரும் ஈடுசெய்ய முடியாது என்பதை அமெரிக்கா உறுதி செய்யும்" என்று கூறினார்.