மாமியாரை வெட்டிக்கொன்ற மருமகன்
அருப்புக்கோட்டை திருச்சுழி அருகே உடையனாம்பட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், திமுக கிளைச் செயலாளரும், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளருமான ராக்கம்மாள் குடும்பப் பிரச்சினை காரணமாக மருமகனால் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
உடையனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரது மனைவியும் உடையனாம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இராக்கம்மாளை (வயது 56) குடும்ப தகராறு காரணமாக அவரது மருமகன் மூர்த்தி (வயது 42) என்பவர் கத்தியால் சரமாரியாக தாக்கியதில் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து காயமடைந்த இராக்கம்மாளை உறவினர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இருப்பினும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்சுழி போலீசார் கொலைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மூர்த்தியை தேடி வருகின்றனர். தற்போது ராக்கம்மாள் உடல் உடற்கூறு ஆய்வுக்காக திருச்சுழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.