மருத்துவர்கள் உட்பட வடக்கில் 29 பேருக்கு கொரோனா தொற்று
வடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் 26 பேர் அடங்கலாக வடக்கு மாகாணத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இதன்படி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2 மருத்துவர்கள், தாதியர்கள் மூவர், சுகாதார ஊழியர்கள் நால்வர், மருத்துவ பீட மாணவர்கள் இருவர், தாதிய மாணவர் ஒருவர், சுத்திகரிப்புப் பணியாளர் ஒருவர், மேலும் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேர் என 19 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணம் சிறைச்சாலை கைதிகள் இருவர், காரைநகரில் மூவர், திருநெல்வேலி பொதுச் சந்தையில் இருவர், மன்னார் பொது வைத்தியசாலையில் ஒருவர், வவுனியா மாவட்டத்தில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர் இருவர்.
இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தகவல் வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்படி, யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகிய ஆய்வுகூடங்களில் 634 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களில் 29 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.