மீண்டும் ஒன்ராறியோ மாகாணத்தில் சிறுவர்களின் குடும்பங்களுக்கு 400 டொலர் உதவு தொகை!
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள பெற்றோர்கள் மாகாண அரசின் மற்றொரு சுற்று தொற்றுநோய் உதவு தொகையைப் பெறவுள்ளனர். இம்முறை முன்னர் வழங்கப்பட்டதை விட இரட்டிப்பாக இந்த உதவு தொகை வழங்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு பாடசாலை செல்லும் வயதுள்ள சிறுவர்களின் குடும்பங்களுக்கு உதவு தொகையான 200 டொலர்களை ஒன்ராறியோ மாகாணம் வழங்கியது.
இந் நிலையில் இவ்வாண்டு இந்தத் தொகை 400 டொலர்களாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், விசேட தேவையுடைய சிறுவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு இந்தத் தொகை 500 டொலர்களாக வழங்கப்படும்.
தொற்று நோயின் ஆரம்பத்தில் இருந்து மாகாணம் 12 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறுவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கும் உயர் தரப் பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கும் இரண்டு முறை தலா 200 டொலர்கள் வீதம் உதவிக் கொடுப்பனவுகளை வழங்கியுள்ளது.
குடும்ப வருமானத்தைப் பொருட்படுத்தாமல் அனைவரும் இந்த உதவு தொகையைப் பெறத் தகுதியுடையவர்களாவர் எனவும் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இவ்வாறான உதவு தொகை வழங்குவதற்காக மொத்தம் 1.8 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பெற்றோர்கள் எவ்வாறு அல்லது எப்போது விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த விவரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. கிடைத்த பின் பதிவிடுவோம் தயவுசெய்து மீண்டும் பார்வையிடவும் .