நளினிக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்கள் விடுதலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் பல ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. ஒருபுறம் பேரறிவாளன் சிறுநீரக தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பரோலில் சிறையிலிருந்து வெளி வந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த வகையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன்னை அருகிலிருந்து கவனித்துக் கொள்வதற்காக மகள் நளினியை பரோலில் விடுவிக்க வேண்டுமென அவரது தாயார் பத்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவெடுத்து விட்டதாக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆண்டுகால சிறை வாழ்க்கையில் ஐந்தாவது முறையாக கடந்த 27 ஆம் நளினி பரோலில் வெளிவந்தார். காட்பாடி பிரம்மபுரம் கங்கை அம்மன் கோவில் தெருவில் இருக்கும் அவரது கணவர் முருகனின்குடும்ப நண்பரான சத்தியவாணி என்பவரின் வீட்டில் அவர் தங்கியிருந்தார்.
இந்நிலையில் நளினிக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து சிறைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தொலைக்காட்சிகள், பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கக் கூடாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது, அரசியல் பிரமுகர்களை சந்திக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தைகளுடன் நளினிக்குபரோல் வழங்கப்பட்டுள்ளது.