
நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளடங்கலாக மீன்பிடி தொழிலாளர்கள் எதிர் கொள்ளும் நெருக்கடிகள்
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் 19 வரையான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளடங்கலாக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாக அமைந்துள்ள இரணைமடு குளத்தின் கீழ் சுமார் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏறத்தாள இருபத்தி ஓராயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் 19 வரையான பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளடங்கலாக நூற்றுக்கும் மேற்பட்ட நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் மீன்பிடி வலைகள் முதலைகளால் சேதப்படுத்தப்பட்டு வருவதாகவும் தற்போதைய சீரற்ற காலநிலையினால் தொழில்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளதுடன் சந்தபுரம் பிரதேசத்தில் இருந்து குளத்துக்கு செல்லும் வீதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மற்றும் காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதாவது தாங்கள் அதிகாலை 3:00 மணி மற்றும் இரவு வேளைகளில் தொழிலுக்கு செல்ல வேண்டிய தேவையுள்ளதனால் இவ்வாறான நிலை காணப்படுவதாகவும் குறித்த வீதியில் வீதி மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என் கூறியுள்ளனர்.அத்துடன் தற்போது பொருட்களின் விலையேற்றம் மற்றும் பொருட்களின் தட்டுப்பாடுகளினால் விலை அதிகரித்து இருக்கின்ற போதும் தங்களிடமிருந்து குறைந்த விலைகளில் மீன்களை கொள்வனவு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.