
அதிகரிக்கும் போர் பதற்றம் : உக்ரைனில் அவசரநிலை பிரகடனம்
பதற்றம் அதிகரித்து வருவதால் ரஷ்யாவில் இருந்து உக்ரைன் நாட்டு மக்கள் வெளியேறும்படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், ரஷியா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை அனுப்ப புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கிழக்கு உக்ரைனுக்கு படைகளை அனுப்ப நஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷியா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீட்டர் தொலைவிலேயே ரஷிய படைகள் முகாமிட்டுள்ளன. செயற்கைக்கோள் படங்களின் மூலம் ரஷ்ய படைகள் நெருங்கிவருவது தெரியவந்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்திருக்கிறது. எந்த நேரத்திலும் ரஷியா போர் தொடுக்கலாம் என்கிற நிலை உருவாகியிருப்பதால், உக்ரைன் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரி அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார். டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து இது நாடு முழுவதும் அடங்கும் எனவும், இந்த உத்தரவு 30 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னரும் சூழலைப் பொறுத்து அவரச நிலை பிரகடனம் நீடிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் அவசர பிரகடனம் அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பதற்றம் அதிகரித்து வருவதால் உக்ரைன் மக்கள் ரஷ்யாவிலிருந்து வெளியேறும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் உக்ரைன் தன் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.