
நடப்பாண்டில் அரசசார்பற்ற நிறுவனங்களினால் அமுல்படுத்தப்படுகின்ற செயற்றிட்டங்கள் தொடர்பாக துறைசார்ந்த திணைக்களத்தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடப்பாண்டில் அரசசார்பற்ற நிறுவனங்களினால் அமுல்படுத்தப்படுகின்ற செயற்றிட்டங்கள் தொடர்பாக துறைசார்ந்த திணைக்களத்தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல் இன்று(22-02-2022) மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் காலை 9.30மணியளவில் மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரண்டாம் கட்டமாக 13 அரச சார்பற்ற நிறுவனங்களினால் மாவட்டத்தில் செயற்படுத்தப்படவுள்ள செயற்றிட்டங்களின் விளக்க உரைகள் சம்பந்தப்பட்ட திணைக்கள தலைவர்களுக்கு அளிக்கை செய்யப்பட்டு அவர்களது கருத்துக்கள் அனுமதிக்காக பெறப்பட்டுள்ளன.
மேலும் முதற்கட்டமாக ஏழு அரசசார்பற்ற நிறுவனங்களின் திட்டமுன்மொழிவுகள் பெப்ரவரி 01ம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்துத்தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் இத்தகைய நடைமுறை எமது மாவட்டத்தில் மட்டுமே பின்பற்றப்படுவதாக சிலர் குறை கூறுகிறார்கள். உண்மையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் செயற்படுத்தப்படும் பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார்ந்த திணைக்கள தலைவர்களுக்கு அவசியம் தெரியப்படுத்துவதற்காகவும் அவர்களது கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு தெளிவுபடுத்துவதற்காகவே இது போன்ற கலந்துரையாடல்களை நாம் நடத்துகிறோம்.
எமது மாவட்ட மக்களுக்கான தேவைகள் அதிகம். அத்தகைய தேவைகளை இத் திட்டங்களினூடாக இனங்கண்டு சரியான திசையில் கொண்டு செல்வதற்கு இத்தகைய கலந்துரையாடல் வலுச் சேர்க்கும் என தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர், புதுக்கடியிருப்பு, துணுக்காய் பிரதேச செயலாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், திட்டத்துடன் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் துறை சார் உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.