
உலக உணவுத்திட்டமும் அரசாங்கமும் இணைந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் கால்நடை உற்பத்தியாளர்களுக்கான திட்ட வழிகாட்டுதல்
உலக உணவுத்திட்டமும் அரசாங்கமும் இணைந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் அமுல்படுத்தப்பட்டு வரும் R5N செயற்திட்டத்தின்கீழ் பல்வகைப்படுத்தப்பட்ட வாழ்வாதார நடவடிக்கைகளுக்காக அடையாளங்காணப்பட்ட கால்நடை உற்பத்தியாளர்களுக்கான திட்ட வழிகாட்டுதல் கலந்துரையாடலானது இன்று(22-02-2022) நடைபெற்றது.
குறித்த திட்டமானது பல்வகைப்படுத்தப்பட்ட வாழ்வாதார நடவடிக்கைகளினூடாக பருவகால பாதுகாப்பற்ற வாழ்வாதாரங்களை நம்பியிருக்கும் குடும்பத்தின் மீள்திரும்பும் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் இது கால்நடைகள் வளர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதும் அணுகுமுறைகளை ஊக்குவிக்கப்படுவதுடன் அவற்றின் உற்பத்திதிறன்களை அதிகரிக்கச் செய்கின்றது.
இத்திட்ட நடவடிக்கைகளுக்காக துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் இவ்வாண்டு ஆடுவளர்ப்போருக்கு பரன் முறையிலான கொட்டகை வசதிக்காக 10 பயனாளிகளும், மாட்டு கொட்டகைகளுக்கு 25 பயனாளிகளும் மற்றும் கொல்லைப்புற கோழி வளர்ப்பு நடவடிக்கைகளுக்காக 30 பயனாளிகளுமாக 65 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவித் தொகையாக ஒருவருக்கு தலா மாடுவளர்ப்புக்கு ரூபா 3 30, 000, ஆடுவளர்ப்புக்கு ரூபா 2 15,000, கோழி வளர்ப்புக்கு ரூபா 2 02,800 வீதம் வழங்கப்படுகிறது.இந் நிகழ்வில் உலக உணவுத் திட்டத்தின் மாவட்டத்தின் பணிப்பாளர் பவானி கணேசமூர்த்தி, துணுக்காய் பிரதேச செயலக உதவிப் பணிப்பாளர் வோல்டி சொய்சா, உலக உணவுத் திட்டத்தின்(WFP) பிரதிநிதி வ.கஜானனன் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.