
ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புக்கு திரை, விளையாட்டு, பல்வேறு நாட்டு தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆளாகி வருகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளும் இந்த பாதிப்புகளில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது தாயாரான ராணி இரண்டாம் எலிசபெத் வசிக்கும் வின்ட்சர் பகுதியில் அவரை சந்தித்து விட்டு திரும்பினார். அடுத்த 2 நாட்களில் இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
ராணி பரிசோதனை செய்து கொண்டாரா என்பது பற்றிய தகவல் எதுவும் வெளிவரவில்லை. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளார் என பக்கிங்காம் அரண்மனை இன்று உறுதிப்படுத்தி உள்ளது.
அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுகின்றன. வருகிற வாரத்தில் அவர் வின்ட்சரில் தங்கியிருந்து இலகுவான பணிகளை தொடர்ந்து செய்வார் என்று அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. ராணி இரண்டாம் எலிசபெத் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.