
பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பசுமை இலங்கை "ஒரு நபர் ஒரு கன்று" தேசிய நிகழ்ச்சித்திட்டம்
வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சினூடாக பசுமை இலங்கை "ஒரு நபர் ஒரு கன்று" தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் அறிமுகக் கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று (18-02-2022) 11.00 மணிக்கு மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இத் திட்டம் 'சுபீட்சத்தின் நோக்கு ' அரசின் கொள்கைப் பிரகடனத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டில் இலங்கையில் வன அடர்த்தியை 30% வரை உயர்த்தும் பொருட்டு வனச் செய்கையினை உயர்த்துவதற்காக பிரதேசத்தினை சரியான முறையில் இனங்காண்பதன் உரிய செயன்முறையினை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் 2030 ஆண்டளவில் இலங்கையின் முழுப்பரப்பில் 32% வரை வனப் போர்வையை விருத்தி செய்வதாக சர்வதேசத்தின் முன்னிலையில் உறுதியளித்ததற்கு அமைவாக 2022 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவின் மூலம் வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சிடம் 2000 மில்லியன் ஒதுக்கப்பட்டு "இலங்கையில் வனக் கிராமங்கள் 200 இனை நிர்மாணித்தல்" வேலைத்திட்டத்தின் ஆரம்ப கூட்டங்களில் ஒன்றாக இது அமைந்திருந்தது.
இக் கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக வன அதிகாரி எம்.எம். வருணப்பிரிய , முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.