தேர்வர்கள் மீதான அடக்குமுறை கண்டித்தக்கது: பிரியங்கா காந்தி
ரயில்வே துறை நடத்திய சிபிடி -2 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்யக் கோரி, பீகார் மாநிலம் கயாவில் அத்தேர்வு எழுதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
அப்போது கயா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் பெட்டிக்கு தேர்வர்கள் தீ வைத்தனர். அப்போது ரயில் பெட்டியில் தீப்பற்றி கரும்புகை வெளியேறிய காட்சிகள் பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஜெகனாபாத்தில் உள்ள காவல்நிலையத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அங்கு பிரதமர் மோடியின் உருவப்படத்தை போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்கள் தீ வைத்து எரித்தனர். அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து பாட்னா மாவட்ட மூத்த காவல்கண்காணிப்பாளர் மாணவ்ஜித் சிங் தில்லன் தெரிவிக்கையில், “இந்த சம்பவத்தில் 6 போட்டித் தேர்வு பயிற்சி மையங்களின் மீதும், அடையாளம் தெரியாத 150 பேரின் மீதும் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இதுவரை வன்முறையில் ஈடுபட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்” இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, தேர்வர்கள் மீதான அடக்குமுறை கடும் கண்டனத்திற்கு உரியது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பிரியங்கா காந்தி, ரெயில்வே என்.டி.பி.சி மற்றும் குரூப்-டி தேர்வு எழுதும் இளைஞர்கள் மீதான அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது. தேர்வு எழுதும் இளைஞர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும். தேர்வர்களும் சத்யாகிரத்தில் மட்டுமே ஈடுபட வேண்டும்” எனவும் பதிவிட்டுள்ளார்.