
சட்டவிரோத மணல் அகழ்வுகள் அனைத்தும் பொலிசாரின் ஒத்துழைப்புக்களுடன் இடம்பெறுகின்றது - விவசாயிகள் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுகள்அனைத்தும்பொலிசாரின் ஒத்துழைப்புக்களுடன் இடம்பெறுகின்றது என்று இரணைமடு விவசாயிகள் சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (24-01-2022) பகல் 2மணிக்கு மாவட்ட செயலக மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.இதில் மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் நீர்ப்பாசன பொறியியலாளர் போலீஸ் உயர் அதிகாரிகள் இராணுவ உயரதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் சம்மேளனம வடமாகானத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் உள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற மணல் அகழ்வு குறிப்பிட்ட ஒரு சிலர் மாத்திரமே தொடர்ந்து சட்டவிரோத மணல் அகழ்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் ஒட்டுமொத்த மக்களும் மணல் அகழ்வில் ஈடுபடவில்லை அவர்களுக்கும் போலீசாருக்கும் நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஆனால் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் பொலிசாரின் துணையுடன் முழுமையாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்றன. அது தொடர்பாக தகவல் வழங்கினால் அவர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லை.முரசுமோட்டைப்பகுதியில் நெல் வயலை அழித்து அங்கே சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்தும் இது தொடர்பாக விவசாயிகள் வடமாகாண ஆளுநர் அவர்களிடமும் குறித்த முறைப்பாட்டை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.