
ஷிப்ட் டைம் முடிந்ததாக கூறி விமானத்தை அவசரமாக தரையிறக்கிய விமானி
பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம், சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இருந்து இஸ்லமாபாத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்படுவதாக இருந்தது. இந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதாக ரியாத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இதற்கிடையே மோசமான வானிலையால் சவுதி அரேபியாவின் தம்மம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தம்மம் விமான நிலையத்தில் சில மணி நேர காத்திருப்புக்கு பின் வானிலை சீரானது.
இதையடுத்து விமானம் புறப்பட தயாரான போது பயணிகளை மேலும் எரிச்சலூட்டும் வகையில் விமானி தனது பணி நேரம் முடிந்து விட்டது எனக்கூறி விமானத்தை மேற்கொண்டு இயக்க மறுத்து கிளம்பியுள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த பயணிகள் விமானத்தில் இருந்து இறங்க மறுத்ததோடு போராடத் தொடங்கினர்.
இதையடுத்து, விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் பயணிகள் அருகில் இருந்த ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு பின்னர், இஸ்லமாபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விவகாரத்தால் தம்மம் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இவ்விவகாரம் குறித்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் கூறுகையில், “ விமான பயணத்தின் பாதுகாப்பு கருதி விமானிகள் கண்டிப்பாக உரிய ஓய்வு எடுக்க வேண்டும்” என்றனர்.