இன்னும் 14 நாளில் கொரோனா உச்சம் அடையும் - சென்னை ஐ.ஐ.டி. கணிப்பு
சென்னை ஐ.ஐ.டி. கணிதவியல் துறையும், கம்ப்யூட்டடேஷனல் கணிதம் மற்றும் தரவு அறிவியல் சிறப்பு மையமும் கணக்கீட்டு மாடல் மூலம், கொரோனா பற்றி பகுப்பாய்வு செய்துள்ளன. அதன் முக்கிய அம்சங்கள்:-
* தற்போது ‘ஆர் வேல்யூ’ என்று சொல்லப்படுகிற கொரோனா பரவல் விகிதமானது, 1.57 சதவீதமாக உள்ளது. இது ஜனவரி 14 மற்றும் ஜனவரி 21 இடையேயான நிலவரம் ஆகும். இதுவே கடந்த 7-ம் தேதிக்கும் 13-ம் தேதிக்கும் இடையே 2.2 ஆக இருந்தது.
அதற்கு முன்பாக டிசம்பர் 25-ம் தேதிக்கும் 31-ம் தேதிக்கும் இடையே இது 2.9 சதவீதமாக இருந்தது. ஆக, ஒரு கொரோனா நோயாளி 2.9 பேருக்கு தொற்றைப் பரப்புகிற நிலை, தற்போது 1.57 பேருக்கு பரப்புகிற நிலையாக குறைந்துள்ளது.
* மும்பையில் இது 0.67, டெல்லியில் 0.98 என இருக்கிறது. ஆனால் சென்னையில் இது 1.2 ஆக உள்ளது. இதுவே கொல்கத்தாவில் 0.56 ஆக இருக்கிறது.
புதிய வழிகாட்டுதல்
* சென்னை ஐ.ஐ.டி. கணிதத்துறை பேராசிரியர் டாக்டர் ஜெயந்த் ஜா கூறும்போது, ‘‘மும்பை, டெல்லி மாநகரங்களில் ஒரு கொரோனா நோயாளி மற்றவர்களுக்கு தொற்றைப் பரப்புகிற ஆர் வேல்யூ அங்கு கொரோனா உச்சம் அடைந்து உள்ளூர் மயமாகி வருவதை காட்டுகிறது. அதே நேரத்தில் டெல்லி மற்றும் சென்னையில் இது இன்னும் 1-க்கு அருகில் உள்ளது.
இதற்கு காரணம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் புதிய வழிகாட்டுதல்கள்படி, அவர்கள் தொடர்பு தடம் அறிதலுக்கான தேவையை நீக்கி உள்ளனர். எனவே முந்தையதைப்போல குறைவான நோய்த்தொற்றுகள் உள்ளன’’ என்று குறிப்பிட்டார்.
14 நாளில் உச்சம்
* சென்னை ஐ.ஐ.டி. கணக்கீட்டின்படி, கொரோனா வைரஸ் தொற்று அடுத்த 14 நாளில் (பிப்ரவரி 6-க்குள்) உச்சம் அடையும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.