புறநோயாளிகள் சிகிச்சைகளை நிறுத்திவிட்டதாக பரவும் செய்திகள் தவறானவை: ஜிப்மர் இயக்குநர்
ஜிப்மர் வெளிப்புற சிகிச்சைகளை நிறுத்திவிட்டதாக பரவும் செய்திகள் தவறானவை என்றும், அனைத்து வெளிப்புற சேவைகளும் தொடர்ந்து செயல்படுகின்றன என்றும் ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஜன. 22) ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. ஒமைக்ரான் வகை தொற்றும் விரைவில் பரவகூடிய தன்மை கொண்டுள்ளது. புதுச்சேரியில் தினசரி சுமார் 2,500 பேர் பாதிக்கப்படுகின்றனர்.
நோயாளிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஜிப்மர் புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொலை மருத்துவ ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனாவுக்கு ஜிப்மரில் முன்கள பணியாளர்களும் அதிகமாக பாதிப்புக்குளாகியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் ஜிப்மரில் உள்ள அனைத்து துறையிலும் குறிப்பிட்ட முன்களப் பணியாளர்கள் அவசர மற்றும் அத்தியாவசிய மருத்துவ சேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் பாதிப்படைந்த மருத்துவர்கள் கூட வீட்டில் இருந்தபடி தொலைபேசி மூலம் மருத்துவ சேவை செய்து வருகின்றனர். ஆனால் அவர்களால் நேரடியாக புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாது.
ஜிப்மரில் கரோனா நோயாளிகளுக்கு ஒரு தனி பிரிவில் ஆக்ஸிஜன் மற்றும் செயற்கை சுவாசக் கருவிகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவசர மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் கரோனா நோயாளிகளும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜிப்மரில் சாமானிய மக்களின் நலன் கருதி வெளிப்புற சிகிச்சை சேவைகளை தொடர வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தல்களை ஜிப்மர் அறிந்துள்ளது. ஜிப்மர் வெளிப்புற சிகிச்சைகளை நிறுத்திவிட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் தவறானவை. ஜிப்மரில் உள்ள அனைத்து வெளிப்புற சிகிச்சை சேவைகளும் தொடர்ந்து செயல்படுகின்றன.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறுகிய கால நடவடிக்கைகளே என்பதை ஜிப்மர் நிர்வாகம் மீண்டும் வலியறுத்துகிறது. இம்மருத்துவமனையில் வழக்கமாக 10 ஆயிரம் புதிய நோயாளிகள் தினந்தோறும் பதிவு செய்யப்பவதால் மத்திய அரசின் தனிமனித விலகல் விதிமுகைள் அமல்படுத்த இயலாது.மேலும் புதிய கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தவுடன் கட்டுப்பாடுகள் திரும்பப்பெறப்படும் என்று உறுதியளிக்கப்படுகிறது. சிறிய அளவிலான மருத்துவ தேவைகள், மருந்துகளுக்காக ஜிப்மர் போன்ற கூட்ட நெரிசல் மிகுந்த பெரிய மருத்துவமனைகளுக்கு வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.