சென்னைக்கு இன்று ‘ரெட் அலர்ட்'
வங்க கடலில் கடந்த 13-ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. அது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று (வியாழக்கிழமை) நெருங்குகிறது.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் இன்று பெய்யக்கூடும். எனவே மேற்சொன்ன மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையத்தால் ‘ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு இருக்கிறது.