மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்- அறிக்கை தர கல்வித்துறை உத்தரவு
கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் கடந்த 11-ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாணவி ஆசிரியர் ஒருவரின் தொடர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மாணவி 11-ம் வகுப்பு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்தார். அப்போது அங்கு பணியாற்றிய இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி (வயது 31) என்பவர் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் போலீசார் மாணவியின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மாணவி எழுதிய கடிதமும் சிக்கியது. அதனடிப்படையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து, போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி வீட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிபதி, வருகிற 26-ந் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, மிதுன் சக்கரவர்த்தி திருப்பூர் மாவட்டம் உடுமலை சிறையில் அடைக்கப்பட்டார்.
தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்துள்ளார். ஆனாலும் பள்ளி முதல்வர் சம்பந்தபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் (52) என்பவர் மீதும் நேற்று முன்தினம் காலையில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவான அவரை பிடிக்க போலீசார் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பெங்களூருவில் இருந்த மீரா ஜாக்சனை கைது செய்தனர். இதையடுத்து, அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.