
மியான்மர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க பத்திரிக்கையாளர் 6 மாதங்களுக்கு பின் விடுதலை
மியான்மர் நாட்டில் ஆட்சியை கடந்த பிப்ரவரி 1ந்தேதி ராணுவம் கைப்பற்றியது. மேலும், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது.
இதனை தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது. நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரியும், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேவேளை ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் உருவாகியுள்ளது. இந்த குழுக்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டங்கள், கிளர்ச்சியாளர்கள் குழுக்களை ராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ராணுவம் ஆட்சியை கைப்பற்றியபோது மியான்மரில் செயல்பட்டு வந்த பல்வேறு பத்திரிக்கையாளர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது. அந்த வகையில் ஃபான்ட்டியர் மியான்மர் என்ற பெயரில் இணைதள பத்திரிக்கை நடந்த வந்த அமெரிக்காவை சேர்ந்த டேனி பென்ஸ்டர் என்பவரையும் ராணுவம் கடந்த மே மாதம் 24-ம் தேதி கைது செய்தது.
போலியான மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செய்தி வெளியிட்டதாகவும், விசா நடைமுறைகளை மீறியதாகவும் டேனி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் யாங்கூனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ராணுவ கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. அந்த விசாரணையில் டேனி மீதான குற்றம் நிரூப்பிக்கப்பட்டதாக ராணுவ கோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கியது. மேலும், அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அதேவேளை மியான்மரில் சிறையில் அடைக்கப்பட்டு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட டேனியை மீட்கக்கோரி அவரது உறவினர்கள் அமெரிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மர் ஆட்சியாளர்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது.
பேச்சுவார்த்தையின் பலனாக 6 மாதங்களுக்கு பின்னர் டேனி சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டார். இதனால், 11 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்கும் தண்டனையில் இருந்து டேனி தப்பினார். மியான்மர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட டேனி தற்போது விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்கா செல்லும் டேனி விரைவில் அவரின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க உள்ளார்.