சென்னையில் தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரம்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீர் 620 மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 3 நாட்களாக பெய்த மழையின் காரணமாக அடித்து வரப்பட்ட திடக்கழிவுகளை அகற்ற தீவிர தூய்மை பணி மேற்கொள்ளப்பட உள்ளது.தூய்மை பணிகளை மேற்கொள்ள பிற நகராட்சிகளில் இருந்து 500 தூய்மை பணியாளர்கள் இன்று முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் என மொத்தம் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. மழையின் காரணமாக சாலைகளில் ஏற்பட்டுள்ள சிறு குழி மற்றும் பள்ளங்களை உடனடியாக சரிசெய்ய, குளிர் தார் கலவை, சிமெண்ட் கான்கிரீட் கலவை கொண்டு சீர் செய்யப்படுகிறது. இந்த பணிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மண்டல அளவில் கண்காணிக்கிறார்கள். கடந்த 10 நாட்களில் 1,330 இடங்களில் சாலைகள் சீர் செய்யப்பட்டு உள்ளன என்றும் மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார். தற்போது 80-க்கும் குறைவான இடங்களில் நீர் தேங்கியுள்ளது. அந்த இடங்களிலும் மழைநீர் வெளியேற்றப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.