கன்னியாகுமரி, நெல்லையில் மிக கனமழைக்கு வாய்ப்பு
தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக நெல்லை, குமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இட மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சேலம், டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில இடங்களில் லேசானது / மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறினார்.