மழை நின்ற பின்னரும் சென்னையில் 300 இடங்களில் வடியாத வெள்ளம்
காற்றழுத்த மண்டலம் நேற்று சென்னை அருகே கரையை கடந்த பிறகு மழைப்பொழிவு கணிசமாக குறைந்தது. இதன் காரணமாக மீட்பு படையினர் நேற்று இரவே மழை நீரை அகற்றும் பணியில் அனைத்து பகுதிகளிலும் களம் இறங்கினார்கள். விடிய விடிய மழை நீர் அகற்றும் பணி நடந்தது.
இன்று காலை சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது. என்றாலும் தொடர்ந்து மழை நீர் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு முன்பு சென்னை நகரில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது புறநகர் பகுதிகளில் தான் மிக மிக அதிக பாதிப்பு காணப்பட்டது.
ஆனால் இந்த தடவை சென்னையில் அனைத்து இடங்களுமே வெள்ளக்காடாக மாறிவிட்டது. குறிப்பாக மத்திய சென்னை பகுதிகளிலும் அதிக அளவு தெருக்கள் மழைத்தண்ணீரில் மூழ்கின. இதன் காரணமாக மழைத்தண்ணீரை அனைத்து இடங்களிலும் ஒரே சமயத்தில் அகற்றுவது என்பது மாநகராட்சி ஊழியர்களுக்கும், பேரிடர் மீட்பு குழுவினருக்கும், தீயணைப்பு குழுவினருக்கும் கடும் சவாலாக இருந்தது.