கனமழையால் சென்னையில் விமானப் போக்குவரத்து பாதிப்பு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கனமழையால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று புறப்பாடு விமானங்கள் சிறிது நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வந்தன. ஆனால் எந்த விமானமும் ரத்து செய்யப்படவில்லை.
சென்னையில் தொடர் கனமழை எதிரொலியாக மாலை 6 மணி வரை விமான வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் காற்றின் தீவிரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கனமழை தொடர்வதால் இரண்டாவது நாளாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லி, கொல்கத்தா, மதுரை, திருச்சி உள்ளிட இடங்களில் இருந்து சென்னை வந்த 11 விமானங்கள் பெங்களூர் அல்லது ஐதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டன.