
பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் இம்ரான்கான் ஆஜர்
பாகிஸ்தானை சேர்ந்த தெஹ்ரீக்-இ-தலீபான் பயங்கரவாதிகள் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 132 சிறுவர்கள் உள்பட 147 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது.
தெஹ்ரீக்-இ-தலீபான் பயங்கரவாதிகள் ஒரு மாத காலத்துக்கு சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்த நிலையில் பெஷாவர் தாக்குதல் குறித்து விசாரித்து வரும் 3 நீதிபதிகளை கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அமர்வு, இந்த வழக்கு விசாரணைக்காக உடனடியாக கோர்ட்டில் ஆஜர் ஆகும்படி பிரதமர் இம்ரான்கானுக்கு நேற்று காலை சம்மன் அனுப்பியது. அதனை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் நேற்று மதியம் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார்.
அப்போது அவரிடம் “150 பேரை கொன்று குவித்த குற்றவாளிகளுடன் (தெஹ்ரீக்-இ-தலீபான்கள்) பேச்சுவார்த்தை நடத்தியது ஏன்?” “பெஷாவர் தாக்குதல் தொடர்பாக உங்கள் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? ” என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
மேலும் “தாக்குதலில் தங்களது பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் இழப்பீடு கோரவில்லை. குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம்” எனவும் பிரதமரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.