கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: சென்னைக்கு அதி கனமழை எச்சரிக்கை
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இதன் காரணமாக நேற்று 8 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில், இன்றும் (வியாழக்கிழமை) 8 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் (ரெட் அலர்ட்), ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், காஞ்சீபுரம், விழுப்புரம், தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சி மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (வெள்ளிக்கிழமை) கோவை, நீலகிரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக பெய்து வரும் கனமழையினைத் தொடர்ந்து, பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்கவேண்டும். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் தனியாக வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும். நீர்நிலைகளின் அருகில் செல்வதையும், ‘செல்பி' எடுப்பதையும் தவிர்க்கவேண்டும். நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதை தவிர்க்கவேண்டும். ஆறு மற்றும் குளங்களில் குளிக்கச் செல்வதை முழுவதும் தவிர்க்கவேண்டும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
டார்ச் லைட்கள், தீப்பெட்டிகள், மெழுகுவர்த்தி, மருந்துகள் மற்றும் உலர்ந்த உணவு வகைகளை நெகிழி பைகளில் வைத்து எடுத்துச் செல்ல ஏதுவாக வைத்துக்கொள்ள வேண்டும். நீர் தேங்கும் பகுதிகளில் கால்நடைகளை கட்டி வைக்காமல், கால்நடைகள் தாங்களாகவே எளிதில் வெளியேறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் மின்கம்பங்களின் அருகே செல்வதை தவிர்க்கவேண்டும். நீரிலோ அல்லது மின்சாரத்திலோ பொதுமக்கள் காயப்பட நேர்ந்தால் உடனே 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இடி மற்றும் மின்னல் ஏற்படும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவேண்டும். பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், 9445869848 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.